ஜம்மு காஷ்மீரில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், பயங்கரவாதிகள் இரண்டு ராணுவ வீரர்களை கடத்தியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், பயங்கரவாத கும்பல் இரு ராணுவ வீரர்களை கடந்து சென்றதாகவும், அதில் ஒருவர் தப்பி வந்த நிலையில், இன்னொருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அனந்தநாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
கைதான மூவரையும் விடுவிக்கத் திட்டமிட்டு, ராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் கடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பயங்கரவாதிகளிடம் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.