மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் 2009லேயே தொடங்கியதாக, முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “2009 ஆம் ஆண்டில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. பின்னர், 2011-ல் அமெரிக்க உளவுத்துறையினர் தஹாவூர் ராணாவை சுட்டிக்காட்டியதுடன், நாடு கடத்தல் நடவடிக்கைகள் வேகமடைந்தன. பல ஆண்டுகள் கடந்து, கடினமான முயற்சிகளுக்குப் பிறகு இப்போது இந்தியா வெற்றி பெற்றுள்ளது,” என்றார்.
இந்த முயற்சியில் வெளிவிவகார, உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வுத்துறை ஆகியவை முக்கிய பங்காற்றியதாகவும், எங்கள் ஆட்சிக்காலத்தில் சல்மான் குர்ஷித், ரஞ்சன் மத்தாய் உள்ளிட்டோர் இதில் பெரும் பங்களிப்பு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மோடி ஆட்சிக்காலத்திலும் பல முக்கிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறிய ப. சிதம்பரம், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹாவூா் ராணா உலகையே உலுக்கிய 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகிய சம்பவத்தில் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது