Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா திரிபின் அறிகுறிகள் - புதிய தகவல்

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா திரிபின் அறிகுறிகள் - புதிய தகவல்
, செவ்வாய், 15 ஜூன் 2021 (23:27 IST)
தலை சுற்றல், வறண்ட தொண்டை, தொடர் சளி போன்ற அறிகுறிகள், இப்போது பிரிட்டனில் கொரோனா டெல்டா வகை திரிபு பாதிப்பை எதிர்கொள்பவர்களிடம் பொதுவாக காணப்படுகின்றன என்று பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கொரோனா ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுவதற்காக நடத்தப்படும் ஸோ கோவிட் ஆய்வு எனப்படும் லாபநோக்கமற்ற செயலியை நிறுவியுள்ள பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், இளம் வயதினருக்கு மோசமாக சளி இருந்தால் அதை டெல்டா திரிபு ஆக உணரலாம் என்று கூறியுள்ளார்.
 
அதே சமயம் பாதிக்கப்பட்ட நபர், தமது உடல்நிலை மோசமடைவதை உணராமல் போனாலும், அது அவரது நிலையை மோசமாக்கி ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும் என்று அவர் கூறுகிறார்.
 
எனவே, தங்களுக்கு கொரோனா இருக்குமா என எவருக்கேனும் சந்தேகம் எழுந்தால், உடனடியாக அவர் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பேராசிரியர் டிம் தரும் அறிவுரை.
 
இருமல், காய்ச்சல், சுவை அல்லது வாசனையை உணராதிருந்தால் அந்த நபர் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கிறது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என்ஹெச்எஸ்).
 
ஆனால், தமது அணியினர் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய செயலியில் பதிவிட்ட அறிகுறிகள் தொடர்பான தரவுகள் அடிப்படையில், இந்த அறிகுறிகள் குறைவாக காணப்படுபவை என்றும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவிக்கிறார்.
 
"கடந்த மே மாத தொடக்கம் முதல், எங்களுடைய செயலியின் பயனர்கள் பகிர்ந்த அறிகுறிகளில் முதன்மையான அறிகுறிகள் பற்றி ஆய்வு செய்தோம். ஆனால், அவை இருக்க வேண்டிய தீவிரத்தை கொண்டிருக்கவில்லை," என்று அவர் கூறினார்.
 
இந்த மாற்றம், டெல்டா திரிபு அதிகரிப்புடன் தொடர்புடையதாக தோன்றுகிறது. இந்தியாவில் கண்டறியப்பட்ட இதே திரிபு இப்போது பிரிட்டனில் பதிவாகும் 90 சதவீத கொரோனா தொற்றாளர்களிடமும் காணப்படுகிறது.
 
காய்ச்சல் பொதுவான அறிகுறிதான். ஆனால், வாசனை நுகரும் திறன் முதல் 10 அறிகுறிகளில் இடம்பெறவில்லை என்கிறார் பேராசிரியர் டிம்.
 
ஆய்வாளரின் எச்சரிக்கை
கொரோனா
"இந்த டெல்டா திரிபு சற்று வித்தியாசமாக செயல்படுகிறது. தங்களுக்கு ஏதோ பருவகால சளி வந்து போனதாக மக்கள் கருதி இயல்பாக வெளியே செல்லத் தொடங்குகிறார்கள். கேளிக்கைகளில் கூட அவர்கள் பங்கேற்கலாம். இதன் மூலம் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தங்களிடம் உள்ள டெல்டா திரிபை அவர்கள் பரப்பலாம்," என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் டிம்.
 
"இது பல பிரச்னைகளுக்கு தூண்டக்கூடிய செயலாக கருதுகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
"இதில் இருந்து அறிய வேண்டியதெல்லாம், நீங்கள் இளமையானவராக இருந்தால் உங்களுக்கு மிதமான அறிகுறிகள் ஏற்படலாம். அது மோசமான சளியாகவோ சற்றே சோர்வாக இருப்பதாகவோ கூட இருக்கலாம். ஆனால், எந்த அறிகுறி தென்பட்டாலும் வீட்டிலேயே இருங்கள். பரிசோதனை செய்து கொண்டு நிலைமையை உறுதிப்படுத்துங்கள்," என்று அவர் தெரிவித்தார்.
 
தசை வலி - அறிகுறி
 
லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்தில் ஆல்ஃபா மற்றும் யுகே திரிபு பாதிப்பு அதிகம் நிறைந்த காலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோரிடம் ஆய்வு நடத்தியது. அதில், கொரோனா தொற்றாளர்களிடம் மேலும் பல அறிகுறிகள் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
 
உடலில் குளுமை நிலை அல்லது அதிருப்தியான சூழல், பசியின்மை, தலைவலியுடன் தசை வலியும் சேருவது போன்றவை புதிய அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன.
 
அரசாங்கம், கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளாக தொடர் சளி, உடல் வெப்பநிலை அதிகரிப்பு, வாசனை திறன் இழப்பு அல்லது சுவை உணர்வை இழத்தல் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளது.
 
இது தவிர வேறு சில அறிகுறிகளும் கொரோனா வைரஸுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த அறிகுறிகள் வேறு காரணங்களாலும் ஏற்படலாம். கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள தேவை எழாவிட்டாலும், அறிகுறிகள் தோன்றுவது பற்றி நீங்கள் கவலை கொண்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அரசு அறிவுறுத்துகிறது.
 
கொரோனா திரிபுகள் என்ன செய்கின்றன?
 
கொரோனா வைரஸ், தன் பரவலை அதிகரித்துக் கொள்ள பல தந்திரங்களை மேற்கொள்கின்றன, அவை:
 
1. கொரோனா நம் உடலுக்குள் நுழைவதற்கான வழிகளை மேம்படுத்திக் கொள்கிறது.
 
2. காற்றில் நீண்ட காலம் உயிர்வாழ்கிறது.
 
3. வைரல் லோட் அதிகரிப்பதால் நோயாளிகள் அதிக வைரஸ்களை சுவாசம் மற்றும் இருமல் மூலம் வெளியிடுகிறார்கள்
 
4. கொரோனா நோய்த்தொற்றின் போதும் அது மற்றொரு நபருக்கு பரவும்போதும் மாறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை ஆராய...ஒரு நபர் ஆணையம் !