தெலுங்கானாவில் உணவு டெலிவரி செய்ய சென்ற ஊழியர் நாய்க்கு பயந்து மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஸ்விகி உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் முகமது ரிஸ்வான். ரிஸ்வான் கடந்த 3 ஆண்டுகளாக உணவு டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி பன்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஷோபனா என்பவர் ஆர்டர் செய்திருந்த உணவை டெலிவரி செய்ய சென்றுள்ளார். மூன்றாவது மாடியில் உள்ள சோபனா வீட்டிற்கு சென்றபோது அவர் வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் ரிஸ்வானை தாக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரிஸ்வான் அங்கிருந்து ஓடியுள்ளார். நாயும் வேகமாக துரத்தி வந்ததால் என்ன செய்வதென்று புரியாமல் மாடியிலிருந்து குதித்துள்ளார் ரிஸ்வான். இதனால் படுகாயமடைந்த ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நாய் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.