இணையதளங்களில் அதிகளவு ஆபாச படங்கள் பதிவு செய்யப்படுவதால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இதனால் இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுநல மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் "கூகுள்' நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
கூகுள் வழக்கறிஞர் அபிஷேக் வாதாடும்போது, 'இணையதளங்களில் யாராவது ஆபாச படங்களை பதிவு செய்தால் அதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் 36 மணி நேரத்தில் அந்த படங்கள் நீக்கப்படும் என்றும் அதற்கு கூகுள் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், 'ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை "கூகுள்' நிறுவனமே கண்டறிந்து அதைத் தடுக்க வேண்டும் என்றும் அல்லது ஆபாச விடியோக்களை பதிவே செய்ய முடியாதபடி தடுத்து நிறுத்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என்றும் கூறினர்.
ஆனால் இதற்கு பதிலளித்த அபிஷேக், 'தொழில்நுட்ப முறையில் இது சாத்தியமில்லை என்றும், கூகுளின் கவனத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்' என்றும் கூறினார்.
பின்னர் இந்த வழக்கு 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.