Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மானியங்களை குறைக்க வேண்டும்: பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை

Advertiesment
மானியங்களை குறைக்க வேண்டும்: பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை
, சனி, 27 பிப்ரவரி 2016 (07:24 IST)
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், மின்சாரத்துக்கு வழங்கப்படும் மானியங்களை குறைக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


 

 
நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம்.
 
2016–17 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 29 (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார்.
 
அதற்கு முன்னோடியாக நாடாளுமன்றத்தில் 2015–16 ஆம் நிதி ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.
 
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டின் பொருளாதார நிலை, தொழில், விவசாயம், சேவைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிலவரம், எதிர்பார்ப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
 
இதில், மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னும் பொருளாதார வளர்ச்சி வீதம் நடப்பு நிதி ஆண்டில் 7.6 சதவீதம் எனவும், அடுத்த நிதியாண்டில் இது 7 முதல் 7.75 சதவீத அளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
2016–17 ஆம் நிதி ஆண்டில் சில்லறை பணவீக்கம் 4½ சதவீதம் முதல் 5 சதவீதம் வரையில் இருக்கும். நிதி பற்றாக்குறையை 3.9 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டி விட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
 
தற்போது நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 முதல் 1½ சதவீத அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி நிலவரப்படி 351.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.23 லட்சத்து 90 ஆயிரத்து 200 கோடி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அடுத்த நிதியாண்டில் மானியத்தின் அளவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்துக்கும் குறைவாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
பொருளாதார ஆய்வறிக்கையில் அனைத்து வகையிலான மானிய குறைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு துரிதமாக ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, சீரற்ற மானிய வினியோகத்தால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அரசு கஜானாவில் இருந்து செல்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சமையல் எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய், மின்சாரம், ரயில் கட்டணம், விமான எரிபொருள், சிறுசேமிப்பு, தங்கம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்குவதில்தான் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் மானிய வகையில் அரசின் கஜானாவில் இருந்து செல்கிற தொகை ரூ.91 ஆயிரத்து 350 கோடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
இது குறைவான மதிப்பீடு, பி.பி.எப். என்னும் பொது சேம நிதி திட்டங்களையும் கணக்கில் கொண்டால் அது ரூ.1 லட்சம் கோடியையும் கடந்து விடும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மானியம் என்பது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் செல்வதை விட உரிய தேவை இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்றும், இதில் அரசு தலையிட்டு சரி செய்தால், அது நாட்டின் நிதி மற்றும் நலனுக்கு மட்டுமல்லாது, அரசியல் பொருளாதார நலனுக்கும் நல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் முதலில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை குறைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது ஆண்டுக்கு 12 மானிய விலை சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதற்கு அதிகமாக தேவைப்படுகிறபோது வெளிச்சந்தை விலைக்கு சிலிண்டர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
 
மானிய விலையில் வழங்குகிற 12 சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 10 ஆக குறைத்து விடலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
இந்த எண்ணிக்கை குறைப்பு குறித்த அறிவிப்பு மத்திய பட்ஜெட்டிலோ அல்லது அதைத் தொடர்ந்தோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், படிப்படியாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு என்ற நிலையை ஒழிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இதேபபோல, மின்சாரதுறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. மின்துறையில் வருவாயை பெருக்குவதற்கு வழிவகை காண யோசனை கூறப்பட்டுள்ளது.
 
விவசாய துறையில் சீர்திருத்தங்கள் என்ற வகையில் கலப்பு இன விதைகளை, மரபணு மாற்றியமைக்கப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேசிய சந்தை வசதியை பெருக்க வேண்டும் என்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
யூரியா சந்தையின் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உர மானியத்தை நேரடியாக வழங்க வேண்டும் என்றும் தாராள இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் குறைவான மாத சம்பளம் பெறுவோர் இபிஎப் சந்தா செலுத்துவதை அவர்களின் விருப்ப தேர்வுக்கு விட்டு விடுவது குறித்து இபிஎப் அமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
நவீன உலகளாவிய வரி வரலாற்றில், ஜிஎஸ்டி என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை இதுவரை இல்லாத மாற்றத்தை அதிரடியாக கொண்டு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கையில் மானிய குறைப்பு யோசனை கூறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உள்ளது. இந்த உச்ச வரம்பை குறைந்தபட்சம் ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் பொருளாதார ஆய்வறிக்கையில், இந்த உச்சவரம்பை உயர்த்தக்கூடாது என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதராரமாக இருந்தவரையில், இது மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தது. அப்போது, இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச மின்சாரம், சாலை மற்றும் கட்டுமானத்துறையில் வளர்ச்சி என்று இருந்தது. இவை எல்லாம் நாட்டின் வருவாய் குறைவாக இருந்தபோதே நடைமுறை படுத்தப்பட்டது.
 
ஆனால், தற்போதுள்ள சந்தை பொருளாதாரத்தில் ஏழை எளிய மக்கள் மீது அதிகப்படியான சுமை ஏற்றப்பட்டு பணக்காரர்களின் கைகளில் மேலும் பணம் சென்று சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil