குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என எந்த மாநில அரசும் கூற முடியாது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு 300 எம்பிக்களுக்கு மேல் ஆதரவும் 80 எம்பிக்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா நிறைவேறி விடும் என்றே கணிக்கப்பட்டது.
அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிர்த்து 92 வாக்குகள் பதிவானது. இதனை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து பலர் போர்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பட்டியலில் இருந்தால் மட்டுமே அதில் இருந்து விலக்குப் பெற மாநில அரசுகளால் முடியும். இந்த விவகாரத்தில் தனித்து முடிவெடுக்க மாநில அரசுகளால் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.