சமூக வலதளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்யும் மீம்ஸ்கள் தற்போது அதிகமாக உலா வருகின்றன. மத்திய பிரதேசம் மாநிலத்தில் வேட்ஸ் ஆப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாத்திரம் கழுவுவது போல் வெளியிடப்பட்ட புகைப்படத்தால் ஒருவர் பலியாகி உள்ளார்.
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் காங்கிரஸ் கவுன்சிலராக இருக்கும் ஜதின் ராஜ் வாட்ஸ் ஆப்பில் குரூப் ஒன்று உருவாக்கி இருந்தார். அதில் பாஜகவை சேர்ந்த பிரசாந்த் நாயக் என்பவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாத்திரம் கழுவுவது போல் கிண்டல் செய்யும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.
இதனால் பாஜகவினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த காவலர்கள் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து மீண்டும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உமேஷ் வர்மா என்பவர் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.