ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அருணாச்சல பிரதேசம் அருகே உள்ள தவாங்க் பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற விமானப்படை அதிகாரிகள், 2 பைலட் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் நேற்று கொண்டு வரப்பட்டது. உடல்கள் சவப்பெட்டியில் இல்லாமல் சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அவமரியாதை செய்யும் விதமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒய்வு பெற்ற ராணுவ கமாண்டர் லெப்டினன் ஜெனரல், ராணுவ வீரர்களின் உடல் கொண்டு வரப்பட்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் உடல் கொண்டு வரப்பட்ட முறையால் எழும்பிய சர்ச்சையை அடுத்து ராணுவத்தின் தகவல் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் சவப்பெட்டியில் வைத்து முழு ராணுவ மரியாதை அளிக்கப்படும் என்றார். ராணுவத்தின் இந்த அவமரியாதையான செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.