Publish Date: Fri, 08 Apr 2022 (15:37 IST)
Updated Date: Fri, 08 Apr 2022 (16:17 IST)
ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம்.
நாடு முழுவதும் மக்கள் இந்தி பேச, படிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. எனினும் பல மாநிலங்களில் இந்தி திணிப்பால் தாய் மொழி அழியும் அபாயம் உள்ளதாக பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழி நெகிழ்வடையாத நிலையில் அது பரவாது. அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல.
இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பல மொழிகள் பேசுவதே இந்திய நாட்டின் ஆதாரம் ஆகும். பன்முகத்தன்மையே இந்தியாவை ஒரே நாடாக வைத்திருக்கிறது. பன்முகத்தன்மையை சீர்குலைக்க பாஜக முயன்றால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என கூறினார்.
Sugapriya Prakash
Publish Date: Fri, 08 Apr 2022 (15:37 IST)
Updated Date: Fri, 08 Apr 2022 (16:17 IST)