ஒடிசா மாநிலத்தில், பச்சிளம் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மந்திரவாதி அந்த குழந்தைக்குள் தீய சக்தி இருப்பதால் சூடு வைக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட பெற்றோர்கள், 40 முறை பச்சிளம் குழந்தையின் உடலில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா மாநிலம் நவரங்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஒரே ஒரு மாதமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், அவர்கள் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.
அப்போது, மந்திரவாதி குழந்தையின் உடலில் தீய சக்தி புகுந்துவிட்டதாக கூறி, அதை வெளியேற்ற, சூடு வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய பெற்றோர்கள், தீய சக்தியை விரட்டும் நோக்கத்தில், குழந்தையின் தலை மற்றும் வயிறு பகுதிகளில் இரும்புக் கம்பியால் 40 முறை சூடு வைத்தனர்.
ஒவ்வொரு முறையும் சூடு வைக்கும் போது, குழந்தை வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழுந்தது. பின்னர், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, குழந்தையின் வயிற்றில் சூடு வைக்கப்பட்டதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.