அந்த பெண் அணிந்திருந்த மோதிரம் குத்தி இரத்தம் வந்தது, நான் அவரை அடிக்கவில்லை என டெலிவரி பாய் விளக்கம்.
பெங்களூரு டிசிபி பகுதியில் வசித்து வரும் இளம்பெண் சமீபத்தில் ஸொமோட்டோ மூலமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் அந்த உணவை டெலிவரி செய்ய சென்ற நபருக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த டெலிவரி பாய் அந்த பெண்ணை மூர்க்கமாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து காயம்பட்ட நிலையில் பெண் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உதவுமாறு கேட்டுக்கொண்டது வைரலானது. அதை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் டெலிவரி பாயை கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்த டெலிவரி பாயிடம் போலீஸார் சம்பவம் குறித்து விசாரித்த போது அவர் பின்வருமாறு கூறியுள்ளார், தாமதமானதால் உணவை திரும்ப எடுத்து செல்லுமாறு அந்த பெண் கூறினார். நானும் எடுத்து செல்ல தயாராக இருந்தேன். ஆனால் என்னை மிகக்கடுமையாக திட்டிய அவர், திடீரென என்னை செருப்பால் தாக்க முயற்சித்தார். நான் தற்காப்புக்காக தடுத்தேன். அப்போது அவர் அணிந்திருந்த மோதிரம் குத்தி இரத்தம் வந்தது. நான் அவரை அடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள டெலிவரி பாயை, சொமாட்டோ நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.