உத்தரகாண்டில் பாஜக எம்.எல்.ஏ.வால் தாக்கப்பட்டு காலை இழுந்த சக்திமான் என்ற குதிரை திடீரெனெ உயிரிழந்தது.
உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் தலைநகர் டேராடூனில் மார்ச் 13ஆம் தேதி, பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையின் குதிரைப்படை பிரிவு வந்தது.
அப்போது, கணேஷ் ஜோஷி வெறித்தனமாக உருட்டுக்கட்டையை எடுத்து, காவல்துறையை அதிகாரி அமர்ந்திருந்த ‘சக்திமான்’ என்ற குதிரையின் கால்களை ஓங்கி அடித்தார். இதனால், அந்த குதிரை கீழே சரிந்து விழுந்தது. இந்த தாக்குதலால் அந்த குதிரையின் கால்களில் முறிவு ஏற்பட்டு, ரத்தம் வடியத் தொடங்கியது.
அதையடுத்து, விலங்குவதை வதை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ், கணேஷ் ஜோஷி மீது டேராடூன் காவல்தறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த விவகாரம் அந்த மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் கோஷங்கள் எழுப்பியதால், சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அடிபட்ட அந்த குதிரைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், குதிரையின் உயிரை காப்பாற்றுவதற்காக, அதன் காலை வெட்டி எடுத்து, அதற்கு மாற்று காலை பொருத்தினார்கள். அதன்பின் குதிரையின் உடல் நிலை தேறி வந்தது. இன்னும் சில நாட்களில் அந்த குதிரை எழுந்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென அந்த குதிரை இன்று மரணமடைந்தது. அதன் உடலுக்கு ஏராளமான காவல்துறை அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சக்திமானின் மரணம் உத்திரகாண்ட் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
14 வயதான, மிகவும் சக்திவாய்ந்த வெள்ளை குதிரை வகையை சார்ந்த சக்திமான் உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்குவகித்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றுவதில் சிறப்பான பணியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.