வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில், ஒரு மாதத்திற்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கின.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர்.
இதில், 420-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தற்போது அங்குள்ள மக்கள் நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் இன்று முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கின. ஒரு மாதத்திற்கு பின் தொடங்கப்பட்ட பள்ளிக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனதை மாற்றி, இதமான சூழலை உருவாக்க ஆசிரியர்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். பரிசுகள், மலர்களை கொடுத்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.