ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டது தொடர்பாக 9 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு 6 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். முன்னேற்பாடும் இன்றி அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாக பாதித்துள்ளது.
தங்களிடம் இருந்த பணத்தையும் வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டு, தற்போது அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல், வங்கிகள் முன்பும், ஏடிஎம் வரிசைகளிலும் நாட்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். இப்படி வரிசையில் நின்றவர்களில், 100-க்கும் மேற்பட்டவர்கள், உயிரிழந்துள்ளனர். இதனால், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவி வருகிறது.
இதனையடுத்து மோடியின் அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று, மாநில உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாதாரண மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க சிரமப்படுவதாக புகார்கள் எழுந்துவரும் நிலையில், ஒரு சிலர் மட்டும் கோடிக்கணக்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவது எப்படி? சோதனைகளின் போது கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படுவது எப்படி? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்கி, ஒரு சில தனியார் வங்கிகளின் மேலாளர்கள்தான், இவ்விஷயத்தில் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். பணத் தட்டுப்பாடு இன்னும் 15 நாட்களில் சரிசெய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
பின்னர், ரூபாய் நோட்டு தொடர்பான வழக்குகள் அனைத்தும் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக அறிவித்த நீதிபதிகள், ரூபாய் நோட்டுகள் பிரச்சனைகள் தொடர்பாக 9 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு 6 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
கேள்விகள்:
* நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆர்பிஐ சட்டம், 1954-ன் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகள் மற்றும் சட்டப்பிரிவு 26 (2)-ன் அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்டதா?
* அரசியல் சட்டப்பிரிவு 300ஏ-ன் படி, சொத்துரிமையை மீறுகிறதா?
* அரசியல் சட்டம் பிரிவு 14 மற்றும் 19-ன் அதிகார வரம்புகளுக்கு மாறாக, இந்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளதா?
* ஒருவர் தனது சொந்தப் பணத்தை எடுப்பதற்கு வரம்பு நிர்ணயிப்பது அரசியல் சட்டப்பிரிவுகள் 14, 19, 20 மற்றும் 21 ஆகியவற்றை மீறுகிறதா?
* ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்பை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் சட்டம் செயல்முறை ரீதியாகவும் அடிப்படை உரிமைகள் ரீதியாகவும் மீறப்படுகிறதா?
* ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 26 (2) கூடுதலான சட்ட அதிகாரங்களை வழங்குகிறதா?
* அரசின் நிதிசார் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக, நீதிமன்றம் சார்ந்த சீராய்விற்கான சாத்தியங்கள், வாய்ப்புகள் இருக்கிறதா?
* அரசியல் சட்டப்பிரிவு 32-ன் படி அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா?
* டெபாசிட்டுகள் மற்றும் பணம் எடுப்பதற்கு மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை பாரபட்சமானதா?