இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. கொரோனா காரணமாக தேர்தல் தேதி ஒத்திவைக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “கொரோனா காரணமாக தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.