சபரிமலையில் மண்டலபூஜைக்காக ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் குவிந்து வரும் நிலையில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.
தற்போது மண்டலபூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் கடந்த 6 நாட்களில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் நெருக்கியடித்து 18 படிகளில் ஏறுவதால் மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ குழுவும் ஆயத்தமாக உள்ளது.
இந்நிலையில் பக்தர்கள் அதிகளவில் வருவதால் தரிசன நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை பூஜைகளுக்கு பிறகு மூடப்படும் நடை மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 3 மணிக்கே திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.