விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 78-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் உரையாற்றிய முதல்வர் ரங்கசாமி, உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றார். இந்தியாவை வளர்ந்த நாடாக, வளமான நாடாக உருவாக்குவதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கித் தந்த தலைவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள் என்றும் அவர்களுக்கு இத்தருணத்தில் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார்.
கல்வி, சுகாதாரம், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றில் புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி ஆசியோடு எனது அரசு எடுத்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் விளைவாகப் புதுச்சேரி தனிநபர் வருமானம் ரூ. 2,63,068 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் கூட்டுறவு வங்கி மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடிக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என்றும் நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதி உதவியினை அவர்களின் வயதிற்கு ஏற்ப ரூ.4,000 மற்றும் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.