மாதம் 53 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் ரூ,.113 கோடி வரி கட்ட வேண்டும் என வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவி குப்தா என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் அவருக்கு மாதம் 53 ஆயிரம் மட்டுமே சம்பளம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரூ.,113 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் உடனடியாக இந்த தொகையை கட்டாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2011 - 2012 ஆம் ஆண்டில் அவரது கணக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் 132 கோடி பண பரிவர்த்தனைக்காக இந்த தொகையை செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே ரவிக்குப்தாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று வருமானவரித்துறையினரால் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பதும் அப்போது மூன்றரை கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் வருமானவரித்துறையினர் இந்த நோட்டீஸ் குறித்து விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.