ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக உத்தரப்பிரதேச மாநில போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நிலையில் இளைஞர் ஒருவர் தினமும் காரில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்லும் காட்சி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் துஷார் சக்சேனா என்பவர் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவரது மொபைல் போனுக்கு மெசேஜ் வந்தது. அதில் நீங்கள் சாலை விதிகளை மீறியதால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றும் நீங்கள் காரில் செல்லும் போது ஹெல்மெட் அணியவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
இது தவறான மெசேஜ் ஆக இருக்கலாம் என்று அவர் அதை புறக்கணித்த நிலையில் அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கும் அபராதம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் போக்குவரத்து போலீசாரை தொடர்பு கொண்ட போது முதலில் அபராதத்தை கட்டுங்கள், அதன் பிறகு இது தவறானதா என்பதை ஆய்வு செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
அபராதம் செலுத்தி சில மாதங்கள் ஆன பின்னரும் அவரது கேள்விக்கு இன்னும் போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என்பதால் அவர் தினமும் தற்போது காரில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்வதாகவும் மீண்டும் ஒரு ஆயிரம் ரூபாயை நான் இழக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரில் செல்லும் நபர்களுக்கு கூட ஹெல்மெட் அவசியம் என்று கூறி தவறுதலாக அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல என்பதும் ஏற்கனவே சில முறை இது போன்ற நிகழ்வு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.