மணிப்பூரில் கடந்த ஆண்டு முதலாகவே இரு சமூகத்தினர் இடையேயான கலவரம் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது காவலர் ஒருவர் எடுத்த செல்பி படத்தால் கலவரம் வெடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி-சோ இன மக்கள் இடையே எழுந்த வன்முறை காரணமாக கடந்த சில மாதங்களாகவே மணிப்பூர் யுத்தகளமாக காட்சியளித்து வருகிறது. போலீஸ், துணை ராணுவம் உள்ளிட்டவை களமிறங்கியும் வன்முறையை முழுவதுமாக தடுக்க இயலவில்லை.
இந்நிலையில் மெய்தி, குகி-சோ மக்கள் தங்கள் கிராமங்களை பாதுகாத்துக் கொள்ள கிராம பாதுகாப்பு தன்னார்வலர் குழுவையும் உருவாக்கியுள்ளன. இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுரசந்தபூர் மாவட்ட தலைமை காவலரான சியாம்லால்பால் என்பவர் சமீபத்தில் ஆயுதம் ஏந்திய குழு மற்றும் குகி-சோ கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுடன் சேர்ந்து எடுத்த செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. அதை சுட்டிக்காட்டி மெய்தி மக்கள் அந்த காவலர் தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். இதனால் அந்த காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
காவலரின் பணிநீக்கத்தை கண்டித்து குகி-சோ மக்கள் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் நிலைமை மேலும் மோசமானது. போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்ததால் போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்தனர், இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.