தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து இன்று ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் நிலையில் துணை முதலமைச்சர் மற்றும் நான்கு அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் விளையாட்டு அரங்கில் பதவி பிரமாண நிகழ்வு நடைபெற உள்ளது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரேவந்த் ரெட்டி அவர்களை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
மல்லுபட்டி விக்ரம் மர்க்கா என்பவர் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். மேலும் இவர்களுடன் நான்கு அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் இன்று முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ரேவந்த் ரெட்டி நேற்று டெல்லி சென்று தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் அதன் பிறகு அவர் சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் பிரமுகர்களுடன் வாழ்த்துக்களை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது