ஆன்லைன் பணவர்த்தனை மூலம் பணம் அனுப்பி அது உரியவருக்கு போய் சேராமலேயே வங்கிகள் நமது கணக்கில் பணம் பிடித்தால் 100 ரூபாய் சேர்த்து அந்த வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் மக்கள் பணம் அனுப்ப பெரும்பாலும் ஆன்லைன் அப்ளிகேசன்களையே நம்பி வருகின்றனர். இதற்காகவே கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அப்ளிகேசன்களும், வங்கிகளின் அப்ளிகேசன்களும் செயல்பட்டு வருகின்றன. சிலசமயம் இவற்றில் பணத்தை அனுப்பும்போது நமது கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விடுவார்கள். ஆனால் யாருக்கு அனுப்பினோமோ அவருக்கு அந்த பணம் போய் சேர்ந்திருக்காது.
பிறகு வங்கிகளுக்கு பலமுறை ஃபோன் செய்து புகார் அளித்து, அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்து பணம் கைக்கு வர மாத கணக்கில் கூட ஆகி விடுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பலர் உரிய நேரத்தில் பணம் அனுப்ப முடியாமல் தீராத மன உளைச்சளுக்கு ஆளாகின்றனர்.
இந்த பிரச்சினையை போக்க ரிசர்வ் வங்கி புதிய நெறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பணம் அனுப்பப்பட்ட நபருக்கு போய் சேரவில்லை என்றால் அனுப்பியவருக்கு உடனே பணத்தை திரும்ப செலுத்த வேண்டும். அதற்கு வங்கிகள் தவறும் பட்சத்தில் எத்தனை நாள் தாமதிக்கிறார்களோ அத்தனை நாளுக்கும், நாளொன்றுக்கு 100 ரூபாய் வீதம் கணக்கிட்டு கூடுதல் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும்.
இந்த அறிவிப்பால் மக்கள் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளதால் வங்கிகள் மக்களின் பணம் குறித்து அக்கறை காட்டும். மேலும் பணம் எடுக்கப்பட்டிருந்தால் 100 ரூபாய் கூடுதலாக தரவேண்டி இருக்கும் என்பதால் உடனடியாக திரும்ப நடவடிக்கை எடுப்பார்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.