பாரத பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்ற பின்னர் தான் ஒரு சில வார்த்தைகளை இந்தியர்கள் கேள்விப்படுகின்றனர். Demonitization, Surgical Attack ஆகிய வார்த்தைகள் இதற்கு முன்னர் இந்தியர்கள் அதிகம் கேள்விப்படாத வார்த்தைகள், ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்த வார்த்தைகளை அனைத்து இந்திய குடிமகன்களும் தெரிந்து கொண்டனர். குறிப்பாக சர்ஜிக்கல் அட்டாக் குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் அட்டாக் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் அதிரடியாக அறிவித்துள்ளார். அவர் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:
பாகிஸ்தான் இந்திய எல்லைகள் மீது ஆக்கிரமிப்பு செய்தால் தக்க பதிலடி கொடுக்கும்படி பாதுகாப்பு படை வீரர்களை கேட்டுக்கொள்கிறேன். முதல் தோட்டா நம்மிடம் இருந்து செல்லக்கூடாது என்றும், பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தினால், நாம் சரமாரியாக தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் எல்லைப் பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் பாகிஸ்தானுக்கு ஒரு பாடமாகும். தேவைப்பட்டால், இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் எல்லை தாண்டி அத்தகைய தாக்குதலை நடத்தும்.
பிரதமர் மோடி தலைமையில் மூன்று ஆண்டுகால ஆட்சியில் உலகின் முன்னணி தலைவர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். ஒரு முறை பலவீனமாக கருதப்பட்ட இந்தியா, தற்போது பிரதமர் மோடி தலைமையில் பலவீனமாக இல்லை.