ராஜஸ்தானில் காதலியை கொன்றதாக சிறைதண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டதாக சொன்ன காதலியை உயிருடன் கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஜான்சி கிராமத்தை சேர்ந்தவர் சோனு சைனி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆரத்தி என்ற பெண்ணும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். அப்போது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆரத்தி மாயமாகியுள்ளார்.
ஆரத்தியை சோனுதான் கல்யாணம் செய்து கொன்றுவிட்டதாக ஆரத்தியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் சோனு மற்றும் அவரது நண்பரை போலீஸார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2015 முதல் 2020 வரை சிறையில் இருந்த சோனுவும், நண்பரும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
ஜாமீனில் வெளியே வந்ததும் அவர்கள் ஆரத்தியை தேட தொடங்கியுள்ளனர். அப்போது விஷாலா என்ற கிராமத்தில் ஆரத்தி போன்ற தோற்றத்தில் ஒரு பெண் வாழ்வதாக சோனுவுக்கு தெரிய வந்துள்ளது. அதனால் காய்கறி விற்பது போல மாறுவேடத்தில் சென்ற சோனு அது ஆரத்திதான் என கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஆரத்தியின் அடையாள ஆவணங்கள் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் மேலும் 2 ஆண்டுகள் போராடி ஆவணங்களை எடுத்து காவல்துறைக்கு அளித்தபின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆரத்தி இறக்கவில்லை என்பது ஆரத்தியின் பெற்றோருக்கு தெரிந்தபோதும் அவர்கள் சோனு மீது பொய் வழக்கு தொடர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.