நான் எங்கே கட்டிப்பிடித்து விடுவேனோ என நினைத்து பாஜக எம்.பி.க்கள் எனை பார்த்து பயந்து ஓடுகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நக்கலடித்துள்ளார்.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், பேசி முடித்த பின் ராகுல் மோடியை கட்டிப்பிடித்ததும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் ராகுல் கலந்து கொண்டார். அந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் கலந்து கொண்டார். அங்கு பேசிய ராகுல் “இப்போதெல்லாம் என்னைப் பார்த்தாலே பாஜக எம்.பிக்கள் 2 அடி தள்ளி நிற்கிறார்கள். அவர்களை நான் கட்டிப்பிடித்து விடுவேன் என அவர்கள் பயப்படுகிறார்கள்” என தெரிவித்தார். இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
மேலும், நாம் ஒருவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால், அவரை வெறுக்க வேண்டியது அவசியம் இல்லை. இதை புரிந்து கொள்ளவேண்டும்.
நாட்டைப்பற்றிய அத்வானியின் கருத்தும், என் கருத்தும் வேறானது. அதற்காக அவரை வெறுக்க வேண்டியதில்லை. அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும், சண்டையிடவும் முடியும் என பேசி ராகுல் அனைவரையும் கவர்ந்தார்.