மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இதன் பாதிப்பு போர் வந்தால் தெரியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ராகுல்காந்தி “நாட்டில் வேலைவாய்ப்பு பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் கடைசியில் ராணுவ வேலைவாய்ப்பும் முடக்கப்பட்டுள்ளது. முப்படைகளில் பணிகளில் சேர கனவோடு பயிற்சி பெற்ற இளைஞர்களின் கனவை மத்திய அரசு உடைத்துவிட்டது. அக்னிபத் திட்டத்தின் பாதிப்பு போரு வரும்போதுதான் தெரிய வரும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்குக் குறித்து பேசிய அவர். தன்னை விசாரிப்பதன் மூலம் காங்கிரஸ் தலைவர்களை பீதிக்கு உள்ளாக்கலாம் என அவர்கள் நினைத்தனர். ஆனால் அது பலிக்காது என்பதை புரிந்துக் கொண்டனர் என கூறியுள்ளார்.