பிரதமருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களுக்கு பேட்டி.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொள்ள வருகை தந்தார். அப்போது அவரது வருகையை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அவர் டெல்லி திரும்பி சென்றார். பாதுகாப்பு குளறுபடி காரணமாகவே இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்பட்டது.
இந்த பாதுகாப்பு குளறுபடி விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து பஞ்சாப் முத்ல்வர் சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பிரதமர் இருந்த 1 கி.மீ. எல்லைக்குள் எந்த போராட்டக்காரர்களும் இல்லை. பிரதமரின் பாதுகாப்புக்காக 6,000 பாதுகாப்புப் பணியாளர்களும், சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பிரதமருக்கு என்ன ஆபத்து வந்திருக்கும் என தெரியவில்லை. பஞ்சாப்பில் பிரதமருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருந்தார். யாரும் அவருக்கு அருகில் செல்லவில்லை என தெரிவித்தார்.