காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவிட தாயாராக உள்ளதாக தெரிவித்தது. இந்தியாவும் அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை பாகிஸ்தான் மீது நடத்த ஆயத்தமானது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது... இந்தியா தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுக்க தயார் என்று தெரிவித்தார். இது இந்தியா - பாகிஸ்தான் உறவை பெரிதும் பாதித்தது. இதில் முக்கியமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது என்று பரவலான கருத்து எழுந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் சதி குறித்த கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA)அறிவித்துள்ளது.
இதுவரை புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த தாக்குதலை நடத்த மூலக்காரணமாக இருந்தது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் என்பவன் ஆவான். அவனை இந்தியாவுக்கு கொண்டு வர பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத இயக்கத்தினர் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய மாருதி ஈகோ கார் காஷ்மீரில் கடந்த 8 வருடங்களுக்கு முன் பதிவுசெய்தது என்றும், இந்தக் காரின் உரிமையாளருக்குத் தெரிந்தே அதை ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பினர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போது இந்தக் காரின் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். மேலும் அதே வாகனத்தை இரு முறை பயன்படுத்தியுள்ளதை சிசிடிவி காட்சியில் உறுதிபடுத்தியுள்ளனர். அதில்லாமல் தாக்குதலுக்கு முன் காரின் முன் பகுதி நிறம் மாற்றப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 25 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி பொருள் எங்கிருந்து கிடைத்தது எப்படி எல்லை மீறி கொண்டு வந்தனர்..?இந்த தாக்குதலுக்கு உதவி செய்தது யார் இப்படி பல விவரங்களை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகின்றன. தற்போது கிடைத்துள்ள தகவல்களை ஒன்று திரட்டி பாகிஸ்தான் சதிக்கான கூடுதல் ஆதாரங்களை இன்னும் சில வாரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.