சர்சார் வல்லபாய் பட்டேலின் சிலை திறப்பிற்காக மத்திய அரசு செய்துள்ள விளம்பர செலவு விவரம் ஆர்.டி.ஐ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
"இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் திரு உருவ சிலை சுமார் 182 மீட்டர் உயரத்தில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, அதனை பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் திறந்துவைத்தார். இது தான் உலகிலேயே மிகப்பெரிய சிலையாகும்.
சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தில் பிறந்தவர் ஆவார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் போன்ற மிகப்பெரிய பொறுப்புகளை வகித்த இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
இதனால், அவருக்கு குஜராத்தில் சிலை வைக்க பிரதமர் மோடி அம்மாநில முதல்வராக இருந்தபோது திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
அந்த சிலைக்கு 'ஒற்றுமைக்கான சிலை' என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் மிக பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
சுமார் 250 என்ஜினியர்கள், 4000 வேலையாட்கள் இந்த சிலையை செய்துள்ளனர். பத்மபூஷன் விருது வாங்கிய ராம் வி சுதர் என்பவர் இந்த சிலையை வடிவமைத்திருக்கிறார்.
இந்த சிலை செய்வதற்கான மொத்த செலவு 2,989 கோடி கோடி ஆகும். நம் நாடு இருக்கும் நிலைமைக்கு இந்த வீண் செலவு தேவையா என பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஜாதின் தேசாய் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த சிலை திறப்பிற்காக அரசு செய்த விளம்பர செலவு தொகை எவ்வளவு என கேட்டிருந்தார். 2.64 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்துள்ளது. இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.