இதற்கு முந்தைய அரசுகளை சுற்றி சந்தேகங்கள் இருந்தன. ஆனால், தற்போதைய அரசைப் பற்றி மக்களின் கனவுகள் இருக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 70வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நமது தேசம் சுதந்திரம் பெறுவதற்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு இன்னும் எண்ணற்றோரை இந்நாளில் நினைவு கூர்வோம்.
இதற்கு முன் இந்தியாவை ஆட்சி செய்த அரசுகளை சுற்றி சந்தேக வலைகளே இருந்தன. ஆனால், தற்போதைய அரசைப் பற்றி மக்களின் கனவுகள் இருக்கின்றன. சாமான்யனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசு இது. சாமான்யர்கள் மேம்பாட்டை பொறுப்புணர்ச்சியுடன் அரசு நிகழ்த்தி வருகிறது.
நாம் நமது எதிர்மறையான எண்ணங்களை நாம் விட வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள 18,000 கிராமங்களில் 10,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த சுதந்திர தின உரையை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அதிக விளைச்சல் தரக்கூடிய 117 வகையான விதைகளை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச பொருளாதாரத்தை நாம் வழிநடத்திச் செல்ல வேண்டுமானால் நமது பொருளாதாரம் சர்வதேச தரத்துக்கு உயர வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி நாம் பேசும்போது ஒரு குறிப்பிட்ட சிலரையே நாம் முன்னிறுத்துகிறோம். ஆனால் அவர்களையும் தாண்டி பலர் நம் நாட்டு சுதந்திரத்துக்காக போராடி இருக்கின்றனர். ஒரே சமூகம், ஒரே பணி, ஒரே இலக்கு என முன்னேறிச் செல்வோம்" என்று கூறியுள்ளார்.