சிவசேனா கட்சியின் முதல்வர் பதவி என்ற பேராசையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு தனித்தனியாக மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. இருப்பினும் முதல்வர் பதவி யாருக்கு என்ற பிரச்சனை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக இன்னும் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது
முதல்வர் பதவியை ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கும் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என சிவசேனா விடுத்த கோரிக்கையை பாஜக நிராகரித்துவிட்டது. துணை முதல்வர் மற்றும் 13 அமைச்சர்கள் பதவிகளை தர பாஜக தயாராக இருப்பதாகவும், இதனை ஏற்றுக்கொண்டு சிவசேனா ஆட்சியில் பங்கு ஏற்கவேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது
இந்த கோரிக்கையை நிராகரித்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் ஆட்சியமைக்க முயற்சித்தது. ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்ததை அடுத்து தற்போது சிவசேனா திரிசங்கு நிலையில் உள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 9ம் தேதியுடன் சட்டமன்றத்தின் காலம் முடிவடைவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்கவில்லை என்றால் அதன்பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் கிட்டத்தட்ட பாஜகவின் ஆட்சி தான் என்பதால் அதனை தவிர்க்க வேண்டுமென்று சிவசேனாவுக்கு மற்ற அரசியல் கட்சிகள் எடுத்துக் கூறி வருகின்றனர். சிவசேனா என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்