பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியவர்களின் கணக்கில் மொத்தமாக 1 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
2014ம் ஆண்டு இந்திய மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியம் என்று பிரதமர் மோடி அவர்கள் ப்ரதான் மந்த்ரி ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்குவோருக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் விபத்து காப்பீட்டு திட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் அடுத்தக்கட்டமாக கடந்த 2018ல் காப்பீட்டு தொகை இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு பலர் இத்திட்டத்தின் மூலமாக வங்கி கணக்குகளை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை மொத்தமாக இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கியவர்கள் 36 கோடி பேர் என தெரிய வந்துள்ளது. இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாதவர்களை வங்கி கணக்கு தொடங்க வைத்து தான் நினைத்ததை சாதித்துள்ளார் மோடி.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் கணக்கு தொடங்கியவர்கள் வங்கி கணக்கு இருப்பு மொத்தமாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. தோராயமாக ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 2500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.