நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி 6 நாட்களுக்குள் 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய பாஜக அரசு அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேலைகள் தொடங்கி முடிக்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக இந்த மருத்துவமனைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் ரூ.1660 கோடி செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் அங்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இன்று காஷ்மீர் செல்லும் பிரதமர் இந்த மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதியன்று ஒரே நேரத்தில் 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ராஜ்கோட், ஆந்திராவின் மங்களகிரி, பஞ்சாபின் பதிண்டா, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மற்றும் மேற்கு வங்கத்தின் கல்யாணி ஆகிய பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படுகின்றன.