தெண்டுல்கருக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
தெண்டுல்கருக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என தெண்டுல்கருக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சச்சின் தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு, முந்தைய காங்கிரஸ் அரசு கிரிக்கெட் ஜாம்பவானான அவரை கவுரவிக்கும் விதமாக 2014-ஆம் ஆண்டு பாரத ரத்னாவை வழங்கியது. இதை எதிர்த்து, வி.கே.நாஸ்வா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது, ”தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பின்னர் சில எழுத்தாளர்கள் அவரையே பாரத ரத்னா விருது போல சித்தரித்தும், தலைப்பிட்டும் புத்தகங்களை வெளியிடுகின்றனர்.இந்த விருதுக்கு பின்னர் தெண்டுல்கர் வர்த்தக விளம்பரங்களில் நடிப்பது அதிகமாகிவிட்டது. இவையாவும் பாரத ரத்னா விருதுக்கான நற்பெயரை களங்கப்படுத்துவது போல் உள்ளது. மேலும் இந்த விருதுக்கான கவுரவத்தை பணம் சம்பாதிப்பதற்காக தெண்டுல்கர் பயன்படுத்தி வருகிறார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, டி.ஒய்.சந்தர சூட் ஆகியோர், தீர்ப்பில், “தெண்டுல்கரை பாரத ரத்னா விருதாக சித்தரித்து 3-வது நபர் புத்தகம் எழுதுவதற்கு விருது பெற்ற நபர் பொறுப்பாக முடியாது. மேலும் பாரத ரத்னா விருது பெற்ற நபர் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை தெரிவிப்பதற்கான அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை.” என்று இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.