இந்தியாவின் தேசிய பறவையான மயிலை உணவாக சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மயில் கறி குழம்பு வைப்பது எப்படி என்று யூடியூபில் வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் பிரனாய் குமார் என்பவர் தனது யூடியூப் சேனலில் மயில் கறி குழம்பு வைப்பது எப்படி என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் மயிலை குழம்பு வைக்கும் காட்சிகள் இருப்பதை அடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் காவல்துறையினர் இந்த வீடியோவின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குமாரை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரனாய் குமாரின் ரத்தம் மற்றும் உணவு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் சமைத்தது உண்மையில் மயில் கறியாக இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.