டெல்லியில் கடந்த 7 நாட்களாக நடத்தி வரும் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என்றும் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது என்றும் அதை வாபஸ் செய்வதற்கு வாய்ப்பே இல்லை உழவர் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை அமைப்பது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லியில் உழவர் விடுதலை கழகம் கடந்த ஒருவாரமாக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த போராட்டம் தற்காலிமாக முடிந்ததாக நேற்றிரவு செய்திகள் வெளிவதது. ஆனால், இந்த செய்தியை போராட்டக் களத்தில் இருக்கும் உழவர் விடுதலை கழகம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து உழவர் விடுதலை கழக நிர்வாகிகள் கூறியபோது, ''இரண்டு நாட்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறி போராட்டத்தைக் கைவிடச் சொன்னது மத்திய அரசு. இரண்டுநாள் இதே போராட்ட இடத்தில் இருக்கின்றோம். நிறைவேறியதும் ஊருக்குச் செல்கிறோம் என்று திட்டவட்டமாகக் நாங்கள் கூறிவிட்டோம். அதுதான் உண்மை. இதனிடையே ஒரு சிலர் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறி விட்டதாகவும், அரசுடன் ஒப்பந்தத்தில். கையெழுத்து போட்டாகிவிட்டதாகவும் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்' என்றுகூறினர்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடர்கிறது.