எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆம் தேதி மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், திடீரென கீழே குதித்து புகை குண்டுகளை வீசியது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைக் கண்டித்தும், இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரியும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியதால், அமலில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்பட ஏராளமான எம்.பிக்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.