தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் பாஜகவுக்கு தாவியதை தொடர்ந்து மகாராஷ்டிர அரசியலே ஆட்டம் கண்டுள்ள நிலையில் அவர் மீதான மோசடி வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு பெரும்பானமை இல்லாத அதேசமயம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் புதிய கூட்டணியை உண்டாக்கி ஆட்சியமைக்க திட்டமிட்டு வந்தன. மறுநாள் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என நாடே தீர்மானித்து விட்ட வேளையில் அப்படியே அந்தர்பல்டி அடித்தது போல் அரசியல் நிலவரமே மாறிபோனது.
தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் விடியற்காலையிலேயே ஆளுனர் மாளிகைக்கு சென்று பாஜகவுடன் இணைந்து துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். அஜித் பவார் இணைந்ததால் பெரும்பான்மை பெற்ற பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.
ஆனால் தேர்தலுக்கு முன்னே அஜித்பவார் மீது ஊழல் வழக்கு இருந்தது. அவர் மீது நிலுவையில் இருந்த 9 வழக்குகளை பதவியேற்ற இரண்டு நாட்களில் ஊழல் தடுப்பு துறை இழுத்து மூடிவிட்டதாக கூறப்படுகிறது.
தேர்தலில் தேசியவாத காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பாஜக அஜித்பவாரின் இந்த ஊழல் வழக்கைதான் பிரதான பிரச்சார உத்தியாக பின்பற்றியதாம். தற்போது அந்த ஊழல் வழக்கை முடித்து வைப்பதாக உறுதி அளித்தே அஜித்பவாரை உள்ளே இழுத்ததாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
அவர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி ஓட்டு வாங்கிவிட்டு இப்போது அவருக்கே துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளார்களே? எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறதாம்!