ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த மக்கள் ஜனநாயக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதை தொடர்ந்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து அம்மாநிலத்தில் ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் பாதுகாப்பு படைகள் முழு வீச்சில் இறங்கியுள்ளது. பயங்கரவாதிகளை அழிக்கும் பணிக்கு ஆப்ரேஷன் ஆல்-அவுட் என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களில் மட்டும் அம்மாநிலத்தில் படித்த இளைஞர்கள் உள்பட 75 இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து உள்ளனர்.
இளைஞர்கள் பயங்கரவாத பாதையை கைவிட்டு வீடு திரும்ப போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், இதற்காக அவர்களது பெற்றோர்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 59 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 243 பயங்கரவாதிகள் செயல்படுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆப்ரேஷன் ஆல்-அவுட் என்ற பெயரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.