நான்காம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடத்தக்கூடாது என உயர்மட்டக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாக புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்கும் வகையில் முன்னாள் கேபினட் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவினர் ஆய்வு செய்து 200 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். அதில் உள்ள முக்கிய பரிந்துரைகளின் விவரம் வெளியாகி உள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோற்கடிக்கக்கூடாது என கல்வி உரிமைச்சட்டம் பரிந்துரைக்கிறது. இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்து, 4-ம் வகுப்பு வரை மாணவர்களை தோற்கடிக்கக்கூடாது என்ற வரைமுறையை உருவாக்க வேண்டும்.
மாணவர்களுக்கு 5-ம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். இதில் முதல் முறை தோல்வியடையும் மாணவ, மாணவிகளுக்கு மேலும் 2 வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காததை உறுதி செய்யும் வகையில் பரிகார பயிற்சி மற்றும் வழிகாட்டுதலில் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வித்துறையில் நிர்வாக தரத்தை உயர்த்த கல்வி பணிநிலை சேவை அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர்களின் திறன் வளர்த்தல் மற்றும் தொழிற்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.