இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி இருந்தார். அதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்றும் இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் என்றும் அவர் கூறியிருந்தார்.
தேர்தல் ஆணையத்தை பொறுப்புடன் நடத்துவதற்கும் குரல் எழுப்புவது நமது கூட்டு கடமையாகும் என்று கார்கே குறிப்பிட்டு இருந்தார். கார்கேவின் இந்த கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், வாக்கு சதவீதம் தொடர்பான காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கடிதம் பாரபட்சமானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதில் தடைகளை ஏற்படுத்தும் வகையில் கடிதம் உள்ளது என்றும் வாக்கு சதவீதம் குறித்த தரவுகளில் தாமதம் இல்லை என்றும் எப்போதும் போல தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கை முக்கியத்துவத்திற்கு எதிராக மல்லிகார்ஜூன கார்கே செயல்படுகிறார் என்றும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.