மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்து, டெல்லியில் தனித்து போட்டியிட்ட நிலையில், அந்த கட்சி ஆட்சியை இழந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில், டெல்லி மற்றும் அரியானாவில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி கட்சிக்கு உதவவில்லை என்பதால், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே மூன்று முறை ஆட்சி அமைத்த நாங்கள், நான்காவது முறையாகவும் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம் என்றும், தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க, ஒரே கொள்கைகள் கொண்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், தேசிய அளவில் பாஜகவை கட்டுப்படுத்துவது இந்தியா கூட்டணிக்கு சற்று கடினம் தான் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.