நீங்கள் கைகாட்டும் வேட்பாளருக்கு உங்கள் கணவர் ஓட்டு போடவில்லை என்றால் கணவருக்கு சோறு போடாதீர்கள் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கடந்த சில நாட்களாக பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் பீகார் மாநிலத்தின் மதுபானி என்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அசோக் யாதவ் என்பவருக்கு ஆதரவாக அவர் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பெண்கள் எப்போதும் புத்திசாலிகள். அவர்கள் சரியான வேட்பாளரை தேர்வு செய்வார்கள். நீங்கள் தேர்வு செய்த வேட்பாளருக்கு உங்கள் கணவரையும் வாக்களிக்க வற்புறுத்துங்கள். அப்படியும் அவர் கேட்கவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதும் அவருக்கு சோறு போடாமல் பட்டினி போடுங்கள்' என்று பேசினார். அவருடைய இந்த பேச்சு கூட்டத்தில் இருந்த பெண்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டை தங்கள் கட்டுப்பாட்டில் பெண்கள் வைத்து கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் அந்த வீடு நல்ல நிலையை அடையும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பெண்கள் குறித்து இவ்வளவு பேசும் நிதிஷ்குமார் தனது கட்சியின் சார்பில் ஒரே ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே வரும் மக்களவை தேர்தலில் நிறுத்தியுள்ளார் என்று சமூக வலைத்தள பயனளிகள் தெரிவித்து வருகின்றனர்