மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க நீட் நுழைவு தேர்வு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதியன்று நடந்து முடிந்த நிலையில் அதன் முடிவுகள் வெளியாகாமல் உள்ளது.
இதனால் மாணவர்கள் வேறு பட்டப்படிப்புகள் சிலவற்றிலும் முன் தயாரிப்பாக விண்ணப்பித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற இருந்த பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே அறிவிக்கப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வின் முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் வினாத்தாள்களுக்கான விடை கொண்ட கீ தாள் ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.