ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜனை நோக்கி தான் நகர்த்திய வேலை முடிந்துவிட்டது என்றும், தன்னுடைய அடுத்த இலக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
சமீபத்தில் டெல்லி மாநகராட்சி ஊழியர் எம்.எம்.கான் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பாஜக எம்.பி மகேஷ் கிரிதான் காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகேஷ் கிரி, அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவரின் வீட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்த சுப்ரமணிய சுவாமி அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மோசடி பேர்வழி. அவர் தன்னை ஐ.ஐ.டி மாணவர் என்று கூறிக்கொள்கிறார். ஆனால், அவர் எப்படி ஐ.ஐ.டியில் சேர்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. தக்க சமயத்தில் அதை வெளியிடுவேன்.
இதுவரை நான் ரகுராம்ராஜனை விரட்டிக் கொண்டிருந்தேன். அவர் போய்விட்டார். இனிமேல், கெஜ்ரிவாலை விரட்டப் போகிறேன்” என்று அதிரடி கிளப்பியுள்ளார்.