மும்பையில் சாலையில் கட்டிட மிச்சங்களை கொட்டிவிட்டு போனவரை பற்றி தகவல் கொடுத்தால் 10000 பரிசு தரப்படுமென மும்பை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.
கடந்த செவ்வாய் கிழமை அன்று மும்பையில் லோட்டஸ் ஜங்க்ஷனிலிருந்து ஹாஜி அலி ஜங்ஷனுக்கு செல்லும் பிரதான சாலையான லாலா லஜபதி ராய் ரோட்டில் ஒரு அடையாளம் தெரியாத லாரி கட்டிடத்தில் மிச்சமான உடைந்த கற்கள், மூட்டைகள் போன்றவற்றை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். அந்த சாலைப்பகுதி முக்கிய போக்குவரத்து பகுதி மட்டுமல்லாமல், அதிக போக்குவரத்து நெரிசலையும் சந்திக்கும் பகுதி. அந்த பகுதியில் பள்ளிகள், தனியார் வளாகங்கள் இருப்பதால் குழந்தைகளும், பாதசாரிகளும் நடந்து செல்லும் பகுதியும் கூட!
இப்படியான முக்கியப் பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டிவிட்டதால் போக்குவரத்துக்கு பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் உடைந்த கற்கள் பட்டு தடுக்கி விழுகிறார்கள். கார் சக்கரங்களின் ஓரத்தில் சிக்கும் கல் பறந்து வந்து நடந்து செல்பவர்கள் மீது தாக்குகிறது. இது ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்பரேசனுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக துப்புறவு பணியாட்களை அனுப்பி அந்த பகுதியை சுத்தம் செய்ய சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் கொட்டி கிடந்தது அனைத்தும் கட்டிட கழிவுகள் என்பதால் அவர்களால் அதை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை. மேலும் கனரக எந்திரங்கள் தேவைப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அது ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிக்க பிரதான சாலை பகுதி என்பதால் கனரக எந்திரங்களை கொண்டு செல்ல முடியாது. எப்படியோ கஷ்டப்பட்டு ஒருவழியாக அந்த கட்டிட கழிவுகளை அகற்றினார்கள்.
ஆனால் இதை கொட்டிவிட்டு போனவர்களை மாநகராட்சி சும்மா விடுவதாக இல்லை. இதை செய்தது யார் என்கிற சரியான தகவலை கொடுப்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. முக்கியமாக அந்த குப்பையை கொட்டிய வண்டியின் எண், ஓட்டுநர் அல்லது கட்டிட உரிமையாளர் பற்றிய தகவல்களை தேடி வருகின்றனர்.