அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் அதானி நிறுவனத்திற்கு மின் விநியோக ஒப்பந்தம் வழங்கியது நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும், மின் வினியோகம் ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். ஆதாரம் இல்லாத பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் இந்த மனுவில் உள்ளன என்றும், இது போன்ற மனுக்களால் சில நல்ல விஷயங்கள் கூட நடத்த முடியாமல் தடுக்கப்படுவதாகவும் கூறினர்.
"முதலமைச்சர் ஊழலில் ஈடுபட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் மனுவில் இல்லை. மேலும், மனுதாரர் டெண்டரிலும் பங்கேற்கவில்லை. மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை. தெளிவற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் மனுவை தள்ளுபடி செய்வதோடு, மனுதாரருக்கு ₹50,000 அபராதம் விதிக்கிறோம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.