கோதாவரியில் ஆற்றை கடக்க முயன்ற போது காருடன் அடித்து செல்லப்பட்ட 5 குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் தட்கல் கிராமத்தை சேர்ந்த பெண் ராஜாமணி. இவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை காபி அருந்தும் போது தன் மீது ஊற்றி கொண்டதால், அந்த குழந்தையின் உடல் சூடு தாங்காமல் வெந்தது.
இதை பார்த்த ராஜாமணி, உடனடியாக காயமடைந்த குழந்தை, மற்ற 4 குழந்தைகள் மற்றும் அவருடைய சகோதரர் நவீனை உதவிக்கு அழைத்து கொண்டு காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள பில்லிவாரு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றை கடந்து தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஆற்றை கடக்க முற்பட்டனர்.
ஆற்றில் கார் இறங்கிய உடன் தண்ணீர் வேகத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. அப்போது நவீனும் காரின் ஓட்டுனரும் அங்குள்ள மரக்கிளை ஒன்றை பிடித்து கொண்டனர். ஆனால் ராஜாமணியும் அவரது 5 குழந்தைகளும் காருடன் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில் ராஜாமணி மற்றும் 5 குழந்தைகள் உடன் கார் கரை ஒதுங்கியது. காவலர்கள் அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மரக்கிளையை பிடித்து கொண்டிருந்த நவீனையும் காரின் ஓட்டுநரையும் கயிறு மூலம் மீட்டனர்.