டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் விசாரணைக் காவல் மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை பண மோசடி விவகாரத்தில் கடந்த மார்ச் 15ஆம் தேதி தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் கவிதாவை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அஜர்படுத்தியது. பண மோசடி வழக்கில் கவிதாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.
பிஆர்எஸ் கட்சித் தலைவரின் மருமகன் மேகா சரணின் வீட்டில் சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து கவிதாவின் காவலை மார்ச் 26ஆம் தேதி வரை நீடித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக பண மோசடி வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.